தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, December 14, 2011

வாராது வந்த மாமணியை தோற்போமோ!

NFTE   BSNL
வாராது வந்த மாமணியை  தோற்போமோ! 

      நாளை  15 - 12 - 2011 அன்று அகில இந்திய அளவில் நடத்தப்படுகின்ற ஒரு நாள் வேலை நிறுத்தத்தைச் சந்திக்கப் போகிறோம்!   எப்படி சந்திக்கப் போகிறோம்?         அதிகாரிகள் முதல் அடிமட்ட ஊழியன் வரை அனைவரும் ஒன்றிணைந்து!   இந்த வாய்ப்புக்க்காகத்தானே  காத்திருந்தோம்.    வந்த வாய்ப்பை நழுவ விடலாமா!
     20 நாள் போராட்டத்தை நடத்தினோமே!   அதற்கு நாம் லீவு கொடுத்தோமா - இல்லை சம்பளத்தைத்தான் இழந்தோமா!  அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பல போராட்டங்களின் பேச்சு வார்த்தைகளில் முதல்  கோரிக்கையே பழி வாங்குதல் ( No Victimization ) கூடாது என்பதுதானே.   அந்தத் தன்மை இன்றைக்கு மாறி விட்டதே ஏன்?    வலுவுள்ள தொழிற்சங்கம் அங்கீகாரத்தில் இல்லை என்பது சொல்லாமலேயே உங்களுக்குப் புரியும்.    அரசாங்கத்தின் No Work, No Pay என்ற மிரட்டும் போக்குக்கு நாம் அடிபணியலாமா?  இது,  நமது வளர்ச்சிக்கான, துறை மேம்பாட்டுக்கான   போராட்டம் என்பதை உணர்வோம்!  எனவே, எந்த வகையிலும் நாம் இப் போராட்டத்திலிருந்து விடுபட்டு, விடுப்பில் செல்லக் கூடாது என்பதை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
     நாளைய   வேலை நிறுத்தம் நமக்கு ரூபாய் 1000,  1500, 2000   என்று ஒரு நாள் ஊதிய இழப்பைத் தரத்தான் செய்யும்.   இது இழப்புதான்  என்பதை நாம் ஒப்புக் கொள்கின்ற அதே நேரத்தில் இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாத ஊழியர்களும், தாங்கிக்கொள்ள  முடிந்த ஊழியர்களும் நம்மிடையேதான்  இருக்கிறார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
  78.2% கிராக்கிப்படி இணைப்பை இலாக்கா கைக்கொள்ளாததால் நமது தோழர்கள் குறைந்த பட்சம் மாதா மாதம் ரூபாய் இரண்டாயிரத்தை இழந்து வருகிறோம்.   எல்லாத் துறையையும் விட அதிக அளவிலான போனசைப் பெற்று வந்த நாம் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதையும் முற்றாக இழந்து விட்டோம்.   ஆண்டுக்கு 10 நாள் LTC  யில் லீவு சரண்டர் செய்து தொகையைப் பெற்றோமே - இன்றைக்கு அதையும் தானே இழந்து விட்டோம்.   மூன்று மாதத்திற்கு ஒரு முறை பெற்று வந்த MRS தொகைக்கும் இன்றைக்கு ஆப்பு அடித்தாகி விட்டது.  இப்படி நம்மால் போராடி பெறப்பட்டவைகள்  எல்லாம்  பறிபோய்விட்ட நிலை.   
     அதுபோல் அங்கீகரிக்கப்பட்ட சங்கம் பெற்றவை ஏதாவது பறிபோயிருக்கிறதா!  (பெற்றிருந்தால் தானே பறிபோவதற்கு).    
     ஆண்டுக்கு 10000 கோடிக்கு மேலே நிகர லாபம், கையிருப்பில் பல ஆண்டுகளாக வைத்திருந்த 40000 கோடி ரூபாய்  ஆகிய இரண்டையும் நமது இலாக்கா இழந்திருக்கிறதே இவை யாராலே?  திட்டமிட்ட அரசாங்கத்தின் தனியார் ஆதரவுக் கொள்கையால்தானே!  அது  மட்டுமல்ல, 2G, 3G, S பாண்டு என்று கோடி கோடி கொள்ளைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.   இப்படி இழந்ததையும் , இழக்கப் போவதையும் நாம் எண்ணிப் பார்த்தோமேயானால் ஒரு நாள் சம்பள இழப்பு என்பது பெரிதாகத் தோன்றாது.
   ஆக, இந்த படுபாதகங்களை  எதிர்கொள்ள எவ்வளவோ போராட்டங்களை நாம் நடத்தி வெற்றி கொள்ள முடியாத சூழலில், இன்றைக்கு  தெரிந்தோ, தெரியாமலோ இந்த ஒரு நாள் வேலைநிறுத்தம் வாராது வந்த மாமணியாக வந்திருக்கிறது.  இதில் நாம் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும் என்பதை உணர்ந்து கொள்வோம்.
     இப் போராட்டம் வெற்றி பெற்றால், அந்த வெற்றி இதுவரை நாம் இழந்ததைப் பெறுவதோடு, BSNL ஐயும் மேம்படுத்தி, தொழிற்சங்கங்களிடையே ஒற்றுமையையும், தொழிலாளர்களிடையே  இணக்கத்தையும் ஏற்படுத்தும் பேராயுதமாக  மாறும்.  
 வாழ்த்துக்கள் தோழர்களே !
தோழமையுடன், 
எஸ். சிவசிதம்பரம்,
மாநில துணைத் தலைவர், 
பட்டுக்கோட்டை.     

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR