தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Saturday, March 30, 2013


DA  உயர்வு 
 DA 3.4 % உயர்ந்துள்ளது.  
71.5 லிருந்து 74.9 ஆக உயர்ந்துள்ளது.

Friday, March 29, 2013



 எல்லாம் வல்ல NFTE 
 அருமைத் தோழர்களே தோழியர்களே

அனைவருக்கும் வணக்கம்.    வருகிற 16-04-13 அன்று 6 வது சரிபார்ப்புத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.  15 ஆம் எண்ணில் நமது வாக்கைச் செலுத்த வேண்டும். கடந்த தேர்தலுக்கும் இத் தேர்தலுக்கும் நிறைய மாற்றங்கள் உள்ளது என்பதை இத் தருணத்தில் கூற விரும்புகிறோம்.   புதிய அங்கீகார விதிகள் நமக்கு அத்தகைய வாய்ப்பைத் தந்திருக்கிறது.  

1.     50 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்ற சங்கம்தான் ஒரே அங்கீகரிக்கப்பட்ட சங்கம்.  (சென்ற தேர்தலில் BSNLEU  வே 50 சதவீதம் பெறவில்லை என்பதை நினைவில் கொள்க.)

2. அடுத்து 35 சதவீதத்துக்கு மேற்பட்ட சங்கம் முதன்மை அங்கீகரிக்கப்பட்ட சங்கம், 15 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகள் பெற்றவர்கள் 2 வது முதன்மைச் சங்கம்.  இந்த 2 சங்கமும் பேச்சு வார்த்தை, உடன்பாடு போன்றவைகளில் சம உரிமை உள்ளவையே.

3. 2 சதவீதம் வாக்குகளைப் பெற்றவர்களுக்கு சந்தா பிடித்தம் செய்து தருவது போன்ற குறைந்தபட்ச சலுகைகள் கிடைக்கும்.

4. அதிக வாக்குகளைப் பெற்ற சங்கத்திலிருந்து செயலரும், அதற்கு அடுத்த சங்கத்திலிருந்து தலைவரும் தேர்ந்தெடுக்கப்படுவர்.


இப்பொழுது உங்களுக்குத் தெரிந்திருக்கும் இத் தேர்தலில் போட்டி என்பது எதில் என்று
அதாவது வெற்றி பெற்ற NFTE மற்றும் BSNLEU இவைகளில் யார் செயலர்? யார் தலைவர்? என்பதை தேர்வு செய்வதற்கான தேர்தலே அது.
செயலர் என்ற பொறுப்புதான் முக்கியமான பொறுப்பு.   அதாவது எதனையும் தீர்மானிக்கும் பொறுப்பு.    
இந்த பொறுப்புக்கு பொறுப்பானவரை தேர்ந்தெடுப்பதுதான் நமது கடமை.
ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட BSNLEU சங்கம் நமது துறைக்கு, தொழிலாளிக்கு ஏமாற்றத்தை, துரோகத்தை செய்திருக்கிறது என்பதை நாமறிவோம்.  ஏன்? அவர்கள் இத் துரோகத்தை நமக்கு மட்டுமல்ல அவர்களுக்கு வாக்களித்த தோழர்களுக்கும் செய்ய வேண்டும்?  காரணம் வேறு ஒன்றுமல்ல!  
பதவி ஆசையும், பணம் சம்பாதிக்கும் ஆசையும்தான்! இதோடு திறமையின்மையும், குப்தா, ஜெகன், சந்திரசேகர் போன்ற வரலாற்று சிறப்பு மிக்க தலைமையின்மையும் ஒரு காரணம். நமக்கு 40 % சம்பள உயர்வு பெற்றுத் தந்த இந்திரஜித்குப்தா போன்ற உயர்தர அரசியல் தலைவர்களும் அவர்களிடம் இல்லை!  எல்லாவற்றிற்கும் மேல் தவற்றை ஒப்புக்கொண்டு முன்னேறும் தன்மையும் இல்லை!
    இன்றைக்கு நம்மிடம் இருப்பது CL - EL -  GPF - சம்பளம் போன்றவைதான்.  இதில் GPF தாமதமாக்கப்பட்டுவிட்டது. சம்பளம் வருவது கேள்விக்குறி என்ற பய உணர்வையும் உருவாக்கிவிட்டார்கள். 
     நாம் பெற்றவைகள் எல்லாம் (போராடி) இன்று இல்லாமல் போனது யார் காலத்தில்? லேசாக அசைபோடுவோம்.
- 2004 வரை இத் துறை பெற்று வந்த லாபம் ஆண்டுக்கு 10000 கோடி  என்பது BSNLEU காலத்தில் இல்லாமல் போனது என்பது மட்டுமல்ல 9000 கோடி நட்டத்தில் வந்து விட்டது. (குதிரை குப்புற தள்ளியது மட்டுமல்ல குழியையும் பறித்த கதைதான்.) அதேபோல் நமது துறை கையிருப்பில் வைத்திருந்த 45000 கோடி ரூபாய் BSNLEU காலத்தில் காணாமலேயே  போய்விட்டதே! (இன்று கையிருப்பை கரைத்து வங்கியில் கடன் வாங்கும் அவல நிலை)
- 25 ஆண்டு காலம் அனுபவித்த போனஸ் போயே    
  போச்சு.
- SC-ST பதவி உயர்வுச் சலுகை அதுவும் அம்போ!
-ஆறு மாதத்தில் கிடைத்துவந்த கருணைப்பணி இன்று  
 எட்டாக்கனி!
- MRS என்னாச்சு?
- அதுவும் LTC  மாதிரி ஓடிப் போச்சு.
- 01-01-2007 முதல் நமது தொழிலாளிக்கு கிடைக்க வேண்டிய 78.2% DA  இணைப்பு கிடைத்ததா? இதனால் இதுநாள் வரை இழந்தது எவ்வளவு?  சொன்னால் வேதனை அதிகமாகும்!  வேறு வழியில்லை. சொல்லித்தான் ஆக வேண்டும்.   
ஒரு Gr. D ஊழியர் ஒரு மாதத்திற்கு ரூபாய் 2128 இழக்கிறார். 01-03-2013 வரை கிடைக்க வேண்டிய நிலுவை Rs. 1,59,600
ஒரு Gr. C ஊழியர் ஒரு மாதத்திற்கு ரூபாய் 2876 இழக்கிறார்.  01-03-2013 வரை கிடைக்க வேண்டிய நிலுவை Rs. 2,15,700.
சரி BSNLEU 2004 ல் கொடுத்த வாக்குறுதிகள்  நமக்கு மறந்து போய்விடுமா? 
    வாரம் 5 நாள் வேலை.
    பரீட்சை இல்லாமல் பதவி உயர்வு.
    5 பதவி உயர்வுகள் இவைகள் எல்லாம்  என்னாச்சு?  
இந்த சின்ன வாக்குறுதி பற்றி இப்போது பேச்சு மூச்சே இல்லை.  இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். 
NFTE யின் துணையோடு இவைகளை சாதிக்க முடியும் என்பதால்தான் இன்றைக்கு SNATTA சங்கமும், அண்ணா தொழிற்சங்கமும் நமக்கு ஆதரவளித்திருக்கிறார்கள்!
எனவேதான் தோழர்களே!   NFTE முதன்மைச் சங்கமாக வரவேண்டுமென்று உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்
BSNLEU, FNTO, TEPU உள்ளிட்ட அனைத்து சங்கத் தோழர்களும் மேற்கண்டவைகள் உண்மைதானா என்பதை உளமார சிந்தித்து NFTE யை ஆதரிக்க வேண்டுகிறோம். 
வாழ்வளித்த துறைக்கும்,  வாய்ப்பளித்த தொழிலாளிக்கும் நன்றி செலுத்த, இழந்ததை எல்லாம் மீட்க, இருக்கின்ற அனைத்தையும் காத்திட நீங்கள்  NFTE க்கு ஆதரவளிக்க  அன்புடன் வேண்டுகிறோம்!
நன்றி தோழர்களே!
எஸ். சிவசிதம்பரம்,
பட்டுக்கோட்டை கிளை.   

Wednesday, March 27, 2013

JAO  PART 2 
தேர்வு முடிவுகள்.

 1. S. மாயகிருஷ்ணன், TMO / PTK 
 2. S. கதிரவன்                   TSO / MNG 
 3. T.L. லதா                         SSO / TNJ 
 4. R. மங்களம்                   SSO / TNJ 
 5. K. நளினி                        SSO / TNJ 
 6. G. சாந்தி                          SSO / TNJ 
 7. R. விஜயா                       SSO / TNJ 
 8. V. கிருஷ்ணசாமி         STSO / TNJ  
 9. R. துரைராஜ்                   SSSO / TNJ  
10. R. சுந்தரமூர்த்தி           TSO / TNJ   
11. S. அரங்கராஜன்           TSO / TNJ     
12. P.S. மூர்த்தி                     STSO / TNJ   

தேர்வில் வென்ற 
தோழர்கள் மற்றும் தோழியர்களை 
அன்போடு வாழ்த்துகிறது 
தஞ்சை மாவட்டச் சங்கம்.

Friday, March 22, 2013


தேர்தல் பிரச்சார சிறப்புக் கூட்டம்
20-03-2013  - தஞ்சை 

    தஞ்சை CTMX வளாகத்தில் தேர்தல் பிரச்சார சிறப்புக் கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.   250 க்கும் மேற்பட்ட தோழர்கள் திரளாக பங்கேற்றது அனைவருக்கும் உற்சாகத்தை தந்தது.   மகளிரும் அதிகளவில் பங்கேற்றனர் 
     கோரிக்கைகள்  முழங்க நமது மாநிலச் செயலரால்  சங்கக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு கூட்டம் துவங்கியது. 
     கூட்டத்திற்கு தோழர் பிரின்ஸ் தலைமையேற்றார்.    மாவட்டச் செயலர் தோழர் பன்னீர்செல்வம் வரவேற்புரையாற்றினார்.  TMTCLU  மாவட்டச் செயலர் தோழர். கிள்ளிவளவன் அஞ்சலி உரையாற்றினார். மாநில துணைச் செயலர் தோழர். K. நடராஜன் துவக்கவுரையாற்றினார்.   மாநில துணைத் தலைவர் தோழர் திருச்சி மனோகரன் சிறப்புரையாற்றினார்.   மாநில மகளிர் அணி அமைப்பாளர்  லைலா பானுவும் உரையாற்றினார்.
    குடந்தை ஜெயபால் அவர்கள் எழுச்சியாக உரையாற்றி அனைவரையும் முருக்கேற்றினார்.   DOT காலத்திலிருந்து இன்றைய நிலைமை வரை செய்திகளை கோர்வையாக வழங்கினார்.   நமது வெற்றி ஒன்றுதான இழந்ததைப் பெறுவது மட்டுமல்ல, துறையையும் தொழிலாளியையும் காத்திடும் என்றார்.
          மாநிலச் செயலரின் சிறப்புரையும் முன்னெப்போதையும் விட வெகு சிறப்பாக அமைந்திருந்தது.  50ஆண்டுகால NFTE செயல்பாட்டில் ஏறுமுகம் தானே தவிர ஒரு சின்ன சறுக்கல் கூட இல்லாமல் செயல்பட்டதை விளக்கிப் பேசினார்.    BSNLEU வின் திறமையின்மையும், ஒன்றுபட்ட செயல்பாட்டில் அக்கரையின்மையும்தான் இன்றைக்கு இவ்வளவு நெருக்கடியை நம்மீது திணித்திருக்கிறது.   இவைகளை சரி செய்வது மட்டுமல்ல, பென்சனைக் காத்திடவும், நமது ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியத்தில் மாற்றமும் கொண்டு வர வேண்டும் என்றார். 
      இலங்கை அரசுக்கு    ஆதரவாக செயல்படும் மத்திய அரசுக்கு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. நமது மாவட்டம் சார்பாக 7500 ரூபாய் தேர்தல் நிதி வழங்கப்பட்டது. 
         இறுதியாக நமது மாவட்டப் பொருளர் தோழர் T. பக்கிரிசாமி அவர்களின் நன்றியுரையோடு கூட்டம் நிறைவுற்றது.      
படங்கள் கீழே:

Thursday, March 21, 2013

ஈழத் தமிழர் ஆதரவு  இயக்கம் 
     20-03-13 அன்று திருவாரூர் கிளையில் ஈழத் தமிழரை ஆதரித்து கூட்டம் நடைபெற்றது.   தோழர் சிங்காரம் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு தோழர் R. குணசேகரன் முன்னிலை வகித்தார்.   100 க்கு மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.   மாவட்டச் சங்க பொறுப்பாளர்களும், கிளைச் சங்க பொறுப்பாளர்களும் கண்டன உரை நிகழ்த்தினர் தோழர் R. நாகராஜ் நன்றியுரை கூறினார்.  
 தகவல்: 
தோழர் A. சேகர், 
கிளைச்செயலர், திருவாரூர். 

Wednesday, March 20, 2013

SNATTA தோழர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.



NFTE-BSNL , SNATTA சங்கங்களுக்கிடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இன்று டெல்லியில் நடைபெற்ற  SNATTA மத்திய செயற்குழுக் கூட்டத்தில் வரும் 6வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் NFTE-BSNLக்கு வாக்களிப்பது என ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டதின் அடிப்படையில் இரு சங்கங்களின் பொதுச்செயலர்களும் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளனர்.


வாருங்கள் தோழர்களே!
கடந்த 8 ஆண்டுகால வேதனைகளை
துடைத்தெறிவோம்!
BSNLஐ வளமாக்குவோம்!!

Sunday, March 17, 2013

 தேர்தல் பிரசார சிறப்புக் கூட்டம் 

இடம்: 
தஞ்சை மேரிஸ் கார்னர் CTMX வளாகம் 
நாள்: 
21-03-2013 வியாழன் மாலை 4 மணி 

தோழர்கள் 
 பட்டாபிராமன்
தமிழ் மாநிலச் செயலர். 
 குடந்தை ஜெயபால் 
அசோகராஜன் மாநிலப் பொருளர்  ஆகியோர் 
சிறப்புரையாற்றுகிறார்கள். 

அனைவரும் வருக! 

Saturday, March 16, 2013

Add caption

Saturday, March 9, 2013

சாவேஸ் என்ற சகாப்தமும் சோசலிசப் புரட்சியும் : சபா நாவலன்

hugo-300x168.jpg

நாம் வாழும் நூற்றாண்டில் அமரிக்க ஏகாதிபத்தியத்தின் கோரக்கரங்களிலிருந்து ஒரு அங்குலம் கூட நகரமுடியாது என்று அச்சம் உலகதின் ஒவ்வொரு மனிதனிடமும் குடிபுகுந்திருந்த வேளையில் அமரிகாவின் கொல்லைபுறத்தில் நெஞ்சை நிமிர்த்தி தனது நாட்டின் மக்களுக்காக வாழ்ந்த தனிமனிதன் ஹூகோ சாவேஸ். வெற்றிகரமான தனது ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலை செயற்படுத்திக்காட்டியவர். ஏகாதிபத்திய நலனுக்கு உலகில் திரும்பிய திசைகளிலெல்லாம் மனிதர்கள் கோழைத்தனமாக மண்டியிட்ட போது, தனி மனிதனாக உலகில் மாற்றங்களை ஏற்படுத்த முனைந்தவர்.
ஹூகோ சாவேஸ் என்ற சகாப்தம் 05.03.2013 அன்று தன்னை இடைநிறுத்திக்கொண்டது. இந்த நூற்றாண்டின் இணையற்ற வீரனின் இறுதி மூச்சு அதிகாலை 4:30 இற்கு நின்று போனது.


ஏழைக் குடும்பத்திலிருந்து 1971 ஆம் ஆண்டு இராணுவவீரராக தனது வாழ்வை ஆரம்பித்த சவேஸ், ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவரானார். 1999 ஆண்டு வெனிசூலா நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்றார்.
அமரிக்க ஏகாதிபத்தியத்தின் கொலைவெறிக்கு எதிராக அரசியலை முன்னெடுப்பது சாத்தியமானதும் வெற்றிகரமானதும் என்றுக் உலகத்திற்கு தனது செயற்பாடுகள் ஊடாக அறிவித்த சாவேஸ் இந்த நூற்றாண்டுன் மாமனிதர்களுள் ஒருவராக உயர்ந்தார்.


பல்தேசிய நிறுவனங்களின் பகல் கொள்ளைக்கு எதிராக தனது நாட்டின் தேசியப் பொருளாதாரத்தை வளர்த்த சாவேஸ் தனது 14 வருட ஆட்சியில் வெனிசூலாவை பல ஆண்டுகள் முன்னோக்கி நகர்த்தியவர்.


அமரிக்க அரசு வாய்கிழியக் கூக்குரல்போடும் ‘தேர்தல் ஜனநாயகத்தின்’ ஊடாக தெரிவானவரே ஹுகோ சவேஸ். 2002 ஆம் ஆண்டு சவேசின் ஆட்சிக்கு எதிராக சதிப்புரட்சியை அமரிக்க அரசு திட்டமிட்டது. இராணுவ அதிகாரிகள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பெரும் அமரிக்க சார்பு பணமுதலைகள், வெனிசூலாவில் இன்றும் ‘சுதந்திரமாக’ செய்திவெளியிடும் அமரிக்க ஊடகங்கள் ஆகியவற்றின் துணையோடு இச்சதிப் புரட்சி திட்டமிடப்பட்டது. சவேஸ், ஜனாதிபதி இல்லத்தின் கூரையிலிருந்து ஹெலிக்கொப்படர் வழியாகச் சதிகாரர்களால் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிச்சென்றார்..


சதிப்புரட்சியைக் கேள்வியுற்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜனாதிபதி வசிப்பிடத்தை நோக்கிப் படையெடுத்தனர். சதிகாரர்கள் கைதாகினர். அன்றய தினமே கூடியிருந்த மக்கள் மத்தியில் தப்பிச்சென்ற அதே ஹெலிகொப்படரில் சவேஸ் வந்திறங்கினார்.


அதே ஆண்டு இறுதியில் மற்றொரு சதிப்புரட்சி தோல்வியடைந்தது.


chavez-supporters_wide-370276e5aa707d7e0

இவற்றிற்கெல்லாம் சளைக்காத சவேஸ், எண்ணை உற்பத்தியில் அரசு பெற்றுக்கொண்ட பணத்தை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தினார். அனைத்து எண்ணை விளை நிலங்களையும் தனியாரின் கரங்களிலிருந்து பறித்தெடுத்த சவேஸ் அரசு அவற்றைத் தேசிய மயமாக்கியது. வங்கிகள் உட்பட ஆயிரம் வரையான நிறுவனங்கள் தேசிய மயமாகின. அபிவிருத்தி என்ற பெயரில் பல்தேசிய நிறுவனங்கள் பயணம் செய்வதற்கு போக்குவரது வசதி செய்யும் உலக அரசுகளின் மத்தியில் மக்களின் உணவு, மருத்துவம், கல்வி போன்ற துறைகளில் அரச பணம் செலவிடப்பட்டது.


அமரிக்காவின் இருதயத்தில் குடிகொண்டிருக்கும் உலகவங்கி தனது அறிக்கையில் ஒப்புதல் வழங்குவது போல 2003 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வறுமை 50 வீதத்தால் வீழ்சியடைந்துள்ளது. அதேவேளை பாடசாலைகளதும் கல்லூரிகளதும் எண்ணிக்கை இரண்டுமடங்காக அதிகரித்துள்ளது.


அமரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக தென்னமரிக்க நாடுகளின் கூட்டமைப்பு சவேசின் முயற்சியினாலேயே உருவாக்கப்பட்டது. சாவேஸ் ஏகாதிபத்திய்க எதிர்ர்பு முகாமிற்கு வழங்கிய நம்பிக்கை அவருக்கு எதிரான சதிவலைகளை உலகம் முழுவதும் உருவாக்கியது. எல்சல்வடோரின் அதிபரின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொண்ட போது அவருக்கு எதிரான கொலை முயற்சி திட்டமிடப்பட்டதாக நிக்கரகுவா புரட்சித் தலைவர் டானியல் ஒட்டேகா தெரிவித்திருந்தார்.


சாவேசை நச்சூட்டி புற்று நோயைத் தோற்றுவித்தது அமரிக்க அரசே என சாவேசிற்குப் பின்னர் தேர்தல்வரை நாட்டைப் பொறுப்பேற்றுள்ள துணை அதிபர் மதூரோ அறிவித்துள்ளார்.


தமது அரசுகளுக்கு அடிபணிய மறுக்கும் ஆட்சியாளர்களுக்கு யூரேனியம் கலந்த பரிசுப்பொருட்களை வழங்கிக் கொலை செய்தத்காக பிரஞ்சு உளவுத்துறை மீது 90 களில் குற்றம்சுமத்தப்பட்டது. பிரஞ்சுப் பாதுகாப்பு அமைச்சராகவிருந்த சார்ள்ஸ் பஸ்குவா என்பவரின் செயலாளர் முன்வைத்த இக் குற்றச்சாட்டு பின்னதாக நிறுவப்படவில்லை.


வெனிசூலா சுதந்திரப் போராட்ட தியாகியான சிமோன் பொலிவாரின் பெயரில் சாவேசின் தேசிய வாத நடவடிக்கைகள் பெயரிடப்பட்டன. சவேசைத் தொடர்ந்து ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் அதனை பொலிவாரியன் புரட்சி என அழைத்தனர்.
உலகின் எண்ணைவள நாடுகளில் நான்காவது இடத்தை வகிக்கும் வெனிசூலாவின் பதின்னான்கு வருட அதிபர் சாவேஸ் யார், அவரின் அரசியல் என்ன என்பது இன்று மீள்பரிசீலனை செய்யபடுவது அவசியம்.


உலகின் பெரும்பாலான இடதுசாரிகள் சாவேசை சோசலிஸ்ட் என்கிறார்கள். 21 ஆம் நூற்றாண்டின் சோசலிச அரசிற்கான முன்னுதாரணம் சாவேசின் அரசு என்கிறார்கள்.


உலகின் எண்ணைவழ நாடுகள் பெரும்பாலானவற்றில் எண்ணை வளம் அந்த நாடுகளின் சொத்துக்க்ளாகவே காண்ப்பட்டன. அச்சொத்துக்களை கையகப்படுத்தியிருந்த தனியாரிடமிருந்து அமரிக்கா உட்பட ஏனைய ஏகாதிபத்திய நாடுகள் அவற்றைப் பெற்றுக்கொண்டு மூலதனமாக்கிக்கொண்டன. சொத்துக்களை வைத்திருத உள்ளூர் வாசிகள் மன்னர்களானார்கள். குவைத், சவுதி அரேபியா, ஈராக், ஈரான் போன்ற நாடுகளில் மன்னராட்சி வடிவங்களே காணப்பட்டன.
வெனிசூலாவிலும் சவேசின் ஆட்சிக்கு முன்னர் இதே நிலைமையே காணப்பட்டது. எண்ணை வளம் மூலதனமாக அன்றி சொத்துக்களாக பெரு நில உடமையாளர்களிடம் காணப்பட்டது. சனத்தொகையில் 6 வீதமானவர்களே இச் சொத்தைக் கையிருப்பில் வைத்திருந்தனர்.


அமரிக்காவின் பெற்றோலியத் தேவையின் 14 வீதத்தை பூர்த்திசெய்யும் வெனிசூலாவின் எண்ணை வளத்தை தேசிய மயமாக்கிய சவேசின் நடவடிக்கை, எண்ணை வளம் வெறுமனே சொத்து என்ற நிலையிலிருந்து மூலதனம் என்ற நிலைக்குச் மாற்றமடைய வழிவகுத்தது. சொத்துக்களை மூலதனமாக்கி நாட்டைச் சுரண்டிய அன்னியத் தரகர்களை அங்கிருந்து விரட்டியடித்தது.


இதனால் வெனிசூலாவில் தேசிய உற்பத்தி பாய்ச்சல் நிலை வளர்ச்சியடைந்தது. தொழில் வளர்ச்சி அதிகரித்தது. எண்ணை உற்பத்தியோடு உப தொழில்கள் தோன்றின. இதனால் தேசிய முதலாளித்துவ வர்க்கம் ஒன்று உருவாகியது. இத் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதியாகவே ஹூகோ சவேஸ் திகழ்ந்தார்.


தவிர, எண்ணை மூலதனத்திலிருந்து தோன்றிய தேசிய முதலாளித்துவம் வெனிசூலாவின் குறிப்பான சூழல். உலகில் ஏனைய நாடுகளுக்குப் பொருத்தமற்றது.


chavez1-300x224.jpg

இதனால் சவேசின் ஆட்சி வடிவத்தை 21 ஆம் நூற்றாண்டின் வெனிசூலா தேசியம் என்று வேண்டுமானால் அழைக்கலாம். பலர் கருதுவது போன்று 21 ஆம் நூற்றாண்டின் சோசலிசம் அல்ல.

இன்று  தேசிய முதளாளித்துவத்தின் வளர்ச்சி உறுதியற்ற நிலையிலேயே காணப்படுகின்றது.


 சவேசின் மரணத்தின் வலி மக்கள் மத்தியிலிருந்து நீங்கும் முன்னமே பல்தேசிய ஊடகங்கள்  அந்த நாட்டின் எதிர்காலம் பற்றி எதிர்வு கூற ஆரம்பித்துவிட்டன. இனி அமரிக்காவுடன் ‘நல்லுறவை’ ஏற்படுத்துவது குறித்து பிபிசி ஏபிசி போன்ற ஊடகங்கள் துயர் பகிர ஆரம்பித்துவிட்டன.


இந்த நிலையில் அமரிக்கா உட்பட்ட ஏகபோகங்களின் தொடர்ச்சியான அழிப்பு நடவடிக்கைகளுக்கு நீண்டகாலத்திற்குத் தாக்குப்பிடிக்க இயலாத நிலையிலேயே உள்ளது. வெனிசூலாவின் தொழிலாளர் வர்க்கம் அணிதிரட்டப்படுவதும், பாராளுமன்ற வழிகளுக்கு அப்பால் சோசலிசப் புரட்சி நடத்தப்படுவதுமே அழிவுகளிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான ஒரே வழி.

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR