தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, August 16, 2017


மாற்றுவழிச் சிந்தனை

By க. பழனித்துரை 
இன்றைய மாறிவரும் அரசியல், பொருளாதார, சமூகச் சூழலில் விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு அவர்கள் வங்கிகளில் பெற்றிருக்கும் கடன்களை தள்ளுபடி செய்வதுடன் முடிந்துவிடுவது அல்ல. இது ஒரு தாற்காலிக நிவாரணம்தானே தவிர நிரந்தரத் தீர்வு அல்ல. இத்துடன் அவர்கள் பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்துவிட்டதாக நாம் நினைத்தால், விவசாயிகளின் பிரச்னைகளில் ஆழ அகலங்களை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்று பொருள்.
கடன் தள்ளுபடி என்பது பிரச்னைகளின் முடிவல்ல, அது ஆரம்பம் என்பதை நாம் உணர வேண்டும். விவசாயிகள் இந்த நாட்டில் மரியாதையுடன் வாழ்பவர்கள். ஆகையால்தான் சுயமரியாதை இழந்து வாழ இயலாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
விவசாயிகள் ஏதோ கடன் தள்ளுபடிக்காகவே போராடுவதாக நாம் நினைத்தால் நம் விவசாயத்தையும் கிராமக் கலாசாரத்தை இழிவுபடுத்துவதாக அமையும். விவசாயிகளின் பிரச்னை என்பது விவசாயத்திற்கான அடிப்படை கட்டுமானங்கள் சார்ந்தது, இடுபொருள் சார்ந்தது, உற்பத்தி சார்ந்தது, விளைந்த பொருள்களை சந்தைப்படுத்துதல் சார்ந்தது, அதற்கும் மேலாக விவசாயத்திற்கான தொழில்நுட்பம் சார்ந்தது, அத்துடன் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் கொள்கை சார்ந்தது.
இவை அனைத்தும் நிர்வாகம், மேலாண்மை மற்றும் ஆளுகை செய்யும் பஞ்சாயத்து அமைப்பு சார்ந்தது. எனவே, விவசாயிகள் பிரச்னை என்பதை கடன் என்ற அடிப்படையில் மட்டும் பார்க்காமல் கிராமப்புற மேம்பாடு மற்றும் வளர்ச்சி என்ற பார்வையில் விரிவாகப் பார்த்து, அலசி ஆராய்ந்து முடிவு காண வேண்டும்.
வறுமை ஒழிப்பு, கிராமப்புற வளர்ச்சி மற்றும் மேம்பாடு என்பதை ஓர் அரை நூற்றாண்டாக கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்குக் குழுவாகவும், தனிக் குடும்பமாகவும் தனித்தனியாக மானியம் வழங்குவதிலும், சலுகைகளை வழங்குவதிலும் நம் மத்திய - மாநில அரசுகள் கவனம் செலுத்தியதே தவிர, கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த பெரும்பணியை மறந்துவிட்டன.
கிராம வளங்கள் சீரழியவும், சிதைந்துபோகவும் அனுமதித்ததன் விளைவு, கிராம மக்கள் தங்கள் குறைந்தபட்ச தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்கத்தை எதிர்பார்த்துப் பயனாளியாக அலைந்து திரிவதைத்தான் நாம் தொடர்ந்து பார்த்து வருகின்றோம்.
அதைவிட மிக முக்கியமாக கூலி வேலை தேடி கிராமப்புற மக்கள் நகர்ப்புறங்களுக்குச் செல்ல முயற்சிப்பதும், அதைத் தடுத்திட 100 நாள் வேலை உறுதியளிப்புத் திட்டம் கொண்டு வந்ததும், நாம் எந்த அளவிற்குக் கிராமங்களைச் சிதைத்துள்ளோம் என்பதனை எடுத்துக் காண்பிக்கின்றன.
அடிப்படையில் இந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வு காணவேண்டும் என்றால் ஒரு சில கேள்விகளுக்கு விடை காண வேண்டும். கிராமங்களில் விவசாயத்திற்கான கட்டமைப்புக்கள் எங்கே இருக்கின்றன? விவசாய உற்பத்திக்கான உயர் தொழில்நுட்பம் எவ்வாறு கிராமங்களுக்குக் கொண்டு சேர்க்கப்படுகின்றன? விவசாயத்திற்கு உதவிடும் நிதி நிறுவனங்களை நாம் எப்படி வைத்துள்ளோம்?
விளைந்த பொருள்களை சந்தைப்படுத்த உருவாக்கிய அமைப்புகள் எங்கே உள்ளன? விளைந்த பொருளிலிருந்து சந்தைக்குக் கொண்டு சென்று மதிப்புக்கூட்டி விற்கத் தேவையான வசதிகளும், தொழில்நுட்பங்களையும் உருவாக்கித் தந்தோமா? அதிகம் விளைந்த பொருள்களை அதிக நாட்களுக்குக் கெட்டுப் போகாமல் சேமித்து வைக்கத் தேவையான தானிய சேமிப்புக் கிடங்குகளை உருவாக்கினோமா?
இவை அனைத்தையும் உள்ளடக்கிய கிராமப்புற மேம்பாட்டிற்கான கல்வித்திட்டங்களை உருவாக்கினோமா? விவசாயிகளின் பல பிரச்னைகளைத் தீர்க்கவல்ல முன்னுதாரண அடஙஇ சட்டம் மாநில அரசால் நிறைவேற்றி செயல்படுத்தப்பட்டனவா? என்ற கேள்விகளுக்கு பதில் தேட நாம் முனைய வேண்டும்.
புரையோடிப் போன இந்தப் பிரச்னைகளுக்கு உடனடித்தீர்வு காண முனைந்தால் நம் விவசாயத்தை எந்த நிலையில் வைத்துள்ளோம் என்பது புரிந்துவிடும்.
ஏரிகளை, குளங்களை, கண்மாய்களை தூர்ந்து போக அனுமதித்தோம், ஆறுகளில் மணல் எடுத்து விற்றுப் பிழைத்தோம், குளங்களையும் ஏரிகளையும் ஆக்கிரமிக்க அனுமதித்தோம், குளங்களுக்கும் ஏரிகளுக்கும் நீர்வரத்து போக்கு கால்வாய்களைத் தூர்வாராமல் அழியவிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தோம், கூட்டுறவு அமைப்புகளை அழியவிட்டு வேடிக்கை பார்த்தோம், கூட்டுறவு அமைப்புகளில் காலத்திற்கேற்ப புதுமைகள் வராமல் பார்த்துக் கொண்டோம், மழைக்காலங்களில் மழை நீர் எந்தவிதத்திலும் மக்களுக்கு பயனளிக்காமல் கடலில் கலக்க அனுமதித்தோம். இப்படி நாம் வாளாவிருந்து விவசாயத்தை, கிராமங்களை அழித்து சூரையாடிய கதைகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து இந்தியாவிற்கு யோகா பயில வந்த நண்பர், ஒரு மலையடிவாரத்தில் விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்தார். அவர் காலை யோகப் பயிற்சி முடிந்தபிறகு அந்த விருந்தினர் மாளிகைக்குப் பக்கத்திலுள்ள கிராமங்களுக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரைச் சந்தித்தபோது அவர் தன் வாழ்க்கையைப் பற்றி விவரித்தது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.
அவர் கூறினார் 'நான் மூன்று பசு மாடுகள்தான் வைத்துள்ளேன். அதுதான் என் பொருளாதாரம், அதை வைத்து நான் சிறப்பாக வாழ்க்கை நடத்துகின்றேன். அதில் சேமித்த பணத்தில்தான் தற்போது யோகா பயில இந்தியா வந்துள்ளேன்' என்று கூறினார். 'என்ன, பால் விற்று வாழ்க்கை நடத்துகிறீர்களா' என்று கேட்டேன். 'ஆமாம், நான் உங்கள் ஊரில் பால் விற்பதுபோல் கறந்த பாலை அப்படியே தனியார் கம்பெனிகளுக்கோ, கடைகளுக்கோ விற்க மாட்டேன். பால் பொருள்களை உற்பத்தி செய்து, என் வீட்டிற்கு அருகாமையிலிருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் பொருள்களுக்கான விலையையும் நானே நிர்ணயித்து, அவற்றை விற்கச் சொல்லிவிடுவேன். அதில் வீட்டில் தயாரித்த பொருள் என முத்திரையையும் பொறித்து விடுவேன்' என்றார்.
'என்னென்ன பொருள்கள் தயாரிக்கின்றீர்கள்' என்றேன். 'பாலிலிருந்து, தயிர், வெண்ணெய், சீஸ், நெய், கொழுப்பு எடுக்கப்பட்ட பால் அனைத்தும் தயாரிப்பேன். அதற்கான சிறிய மெஷின்கள் அனைத்தும் என் வீட்டில் உள்ள ஒரு சிறிய கொட்டகையில் வைத்துள்ளேன்' என்றார்.
அதைச் சொல்லிவிட்டு நாங்கள் செய்வதுபோல் உங்கள் கிராமங்களில் பால் மாடுகள் வைத்திருப்போர் செய்தால் மிகச் சிறந்த வாழ்க்கையை எங்களைவிடச் சிறப்பாக உங்கள் கிராம மக்கள் வாழ முடியும் என்று விவரித்தார். அது மட்டுமல்ல, 'நான் மாடுகள் மட்டும்தான் வைத்துள்ளேன், உங்கள் கிராமங்களில் மாடுகள், அத்துடன் ஆடுகள், கோழிகள் வைத்துள்ளனர். இவற்றைப் பயன்படுத்தி இன்னும் பல பொருள்களை உற்பத்தி செய்து, பக்கத்தில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் விற்றுவிடலாம்' என்றார்.
மேலும், 'உங்கள் கிராமங்களில் பார்த்த ஆடுகளில் பால் கறந்து வெளி நாடுகளுக்கே ஒரு வகையான சீஸ் தயாரித்து அனுப்பலாம், அத்துடன் ஆடு, கோழி இவற்றின் இறைச்சியைப் பதப்படுத்தி பக்கத்திலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் விற்றுவிடலாம். இதற்குத் தேவை சிறிய தொழில்நுட்பப் பயிற்சி. அடுத்து இதற்குத் தேவையான சிறிய உபகரணங்கள். அவற்றையும் இந்தியாவிலேயே தயாரித்துவிடலாம். இதற்குத்தான் விவசாயப் பல்கலைக்கழகங்கள் உதவிட வேண்டும்' என்றார்.
நான் கிராமங்களுக்குச் செல்லும்போது அங்குள்ள வாய்ப்புகளைப் பார்ப்பேன். இவ்வளவு சூரிய ஒளி கிடைக்கும் நாட்டில் கிராமங்களில் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரித்து வருமானமே ஈட்டலாம்.
அதுமட்டுமல்ல, அங்கு உற்பத்தியாகும் குப்பைகளை வைத்து மின்சாரமும் தயாரிக்கலாம், உரமும் தயாரிக்கலாம். இவற்றிற்கான கொள்கைகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் செய்து கொடுத்தாலே கிராம மக்களின் வாழ்க்கை மேம்பட்டுவிடும்.
இவையெல்லாம் அடிப்படை மாற்றத்திற்கானது. அதற்கு தரமான கல்வியும், கடின உழைப்பும் தேவை. அதற்கு அரசு சரியான கிராமப்புற மேம்பாட்டுக் கொள்கையும், கிராமப்புற மேம்பாட்டுக் கல்வியும், கிராமப்புறங்களில் விவசாயத்திற்கான கட்டமைப்புகளும் உருவாக்கி செயல்படுத்த வேண்டும். இந்தச் செயல்பாடுகளை மக்கள் பேரியக்க செயல்பாடாக மாற்றி பெருமளவு நிதி ஒதுக்கீட்டில் நடைமுறைப்படுத்த முயல வேண்டும்.
அப்படிச் செய்தால், இந்திய கிராமவாசிகள் மதிப்புமிக்க மரியாதையுடைய வாழ்க்கையை வாழ முடியும் என்றார். விவசாயத்தைப் புனரமைக்க கிராம மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைச் சூழல் மாற்றியமைக்கப்பட வேண்டும். அது ஓர் ஒருங்கிணைந்த மாற்றுவழிச் சிந்தனையுடன் கூடிய பெரும் செயல்பாடு. அதற்கு அரசு முயல வேண்டுமேயன்றி, கடன் தள்ளுபடி மட்டும் செய்தால் போதாது!
நன்றி: தினமணி.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR