தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, October 25, 2017

படம் வெளியிட மனமில்லை!
நேற்று அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததில் இருந்து மனம் நிலைகொள்ளாமல் தவிக்கின்றது. மனித உணர்ச்சி கொஞ்சமாவது உள்ள யாரையுமே நடுங்கச் செய்துவிடும் காட்சிகள் அவை. இரவு முழுவதும் தூக்கம் பிடிக்கவில்லை. அந்தக் குழந்தைகளின் அலறல் சத்தம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. நெருப்பு பிடித்து உடல் முழுவதும் எரியும் போது அந்தக் குழந்தைகள் எப்படி துடித்திருப்பார்கள்! நம்வீட்டில் குழந்தைகளுக்கு ஏதாவது லேசான அடிபட்டு அழ ஆரம்பித்தாலே மனமெல்லாம் பிசைய ஆரம்பித்து விடுகின்றது. எந்த அளவிற்கு மனம் வெறுத்திருந்தால் பெற்ற குழந்தைகளையே நெருப்பு வைத்துச் சாகடிக்க அந்த பெற்றோர்கள் துணிந்திருப்பார்கள். வேறு வாய்ப்புகளே கிடையாது, சாவதைத் தவிர என்ற முடிவிற்கு அவர்களை இழுத்துச் சென்ற பாவிகள் எவ்வளவு குரூர மனம் படைத்த மிருகங்களாக இருப்பார்கள்.
நெருப்பு வைத்துக்கொண்டு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கும் இசக்கிமுத்துவுக்கு வயது வெறும் 28 தான் ஆகின்றது. இறந்துபோன அவரது மனைவி சுப்புலட்சுமிக்கு 25 வயதுதான் ஆகின்றது. அதற்குள்ளாகவே அவர்களது வாழ்க்கையை கந்துவட்டி கும்பலும், காவல்துறையும், மாவட்ட ஆட்சியரும் சேர்ந்து முடித்து வைத்திருக்கின்றார்கள்.
இசக்கிமுத்துவின் மனைவி சுப்புலட்சுமி, முத்துலட்சுமி என்ற பெண்ணிடம் 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயை கந்துவட்டிக்குக் கடன் வாங்கி இருக்கின்றார். வாங்கிய கடனுக்கு மேல் 2 லட்சத்து 34 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். ஆனால் கொடுத்த முதலுக்கு மேல் 89 ஆயிரம் ரூபாயை வட்டியாக வாங்கியும் போதாமல் கொடுத்த பணம் 1 லட்சத்து 45 ஆயிரத்தையும் திருப்பி கொடுக்க வேண்டும் என்று மிரட்டி இருக்கின்றார் கந்துவட்டி முத்துலட்சுமி. இது தொடர்பாக இசக்கிமுத்து, அச்சன்புதூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக இசக்கிமுத்துவையும், அவரது மனைவியையும் காவல்துறை மிரட்டியுள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் 6 முறை புகார் கொடுத்தும் அந்தப் புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கலெக்டர் வேறு எதையோ கழற்றிக் கொண்டிருந்திருக்கின்றார்.
இதனால் மனம் வெறுத்துப்போன நிலையில் தான் இசக்கிமுத்து தன்னுடைய மனைவி மற்றும் 5 வயது, ஒன்றரை வயது குழந்தைகளுடன் நெருப்பு வைத்துக் கொண்டு சாக முடிவெடித்திருக்கின்றார். இசக்கிமுத்து கொடுத்த புகார் மனுவை மயிரளவுக்குக் கூட மதிக்காமல் அலட்சியமாக இருந்துவிட்டு, இப்போது மூன்று பேரை துடிதுடிக்க கொன்று போட்டுவிட்டு, வெட்கமே இல்லாமல் நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கந்துவட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்றார். இதே போல திருநெல்வேலி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அருண் சக்தியும் அச்சன்புதூர் காவல் நிலைய காவலர்கள் மீது குற்றம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெட்கமே இல்லாமல் சொல்கின்றார்.
வங்கிகள் எல்லாம் அம்பானிக்கும், அதானிக்கும், டாட்டாவுக்கும் , மல்லையாவுக்குமானதாக மாறிவிட்ட சூழ்நிலையில் அவர்கள் முழுக்க முழுக்க இந்தக் கந்துவட்டி கும்பலையே நம்பி தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். காலையில் இருந்து வேகாத வெய்யிலில் உட்கார்ந்து வியாபாரம் செய்து ஒரு 100 ரூபாயோ, இல்லை 200 ரூபாயோ முதலுக்கு மேல் லாபம் ஈட்டினால் அதில் பாதிக்கு மேல் கந்துவட்டி கும்பலின் கைகளுக்குச் சென்றுவிடும். உழைக்காமல் தங்கள் மூலதனத்தை கந்துவட்டி கும்பல் இப்படித்தான் பெருக்கிக் கொள்கின்றது. அதே சமயம் மாடுபோல உழைத்த சாமானிய மக்கள் தொடர்ந்து கந்துவட்டிக்குக் கடன்வாங்கியே ஆகவேண்டும் என்ற சூழ்நிலையும் உருவாகி விடுகின்றது.
ஒரு பக்கம் விவசாயிகள் தற்கொலை, அரசே முன்னின்று நடத்தும் டெங்கு கொலைகள், மற்றொரு பக்கம் ஆளும்கட்சியின் துணையுடனும் கட்டப்பஞ்சாயத்து நிலையங்களின் துணையுடனும் நடக்கும் கந்துவட்டிக் கொலைகள் என ஒட்டுமொத்த தமிழ்நாடே சுடுகாடாய் மாறிக்கொண்டு இருக்கின்றது. இன்னும் என்ன என்ன எல்லாம் தமிழக மக்களை இந்த மானங்கெட்ட கோமாளிகளின் அரசு செய்யப் போகின்றதோ என நினைத்தாலே அடிவயிறு கலங்குகின்றது.
கலங்குகின்றது.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR